May 7, 2021
தண்டோரா குழு
தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதேபோல், முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து சென்னை தலைமை செயலகம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். முதலில், ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி ரூபாய் 4,000 வழங்குவதற்கான கோப்பில் முதலமைச்சர் கையெழுத்திட்டார். அதன்படி, முதல் தவணையாக ரூபாய் 2,000 மே மாதத்திலேயே வழங்கப்பட உள்ளது. 2.07 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூபாய் 4,153.39 கோடி செலவில் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.
அடுத்ததாக, மே 16ஆம் தேதி முதல் ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3 குறைக்கப்படும் கோப்பில் முதலமைச்சர் கையெழுத்திட்டார்.நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
மேலும், மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் கையெழுத்துயிட்டு, உத்தரவு பிறப்பித்துள்ளார்.