May 29, 2018
தண்டோரா குழு
முதலமைச்சர் பதவி விலகும் வரை பேரவை நிகழ்வுகளில் திமுக பங்கேற்காது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது,மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செ.மாதவன்,ஜெ.குரு உள்ளிட்ட 7 பேரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி பிரச்சனை குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க ஸ்டலின் கோரிக்கை வைத்து இருந்தார்.இந்த கோரிக்கையை விதி எண் 56–ன் கீழ் அவையை ஒத்திவைக்க வலியுறுத்தினார். அதற்கு தூத்துக்குடி பிரச்சனை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார்.இதையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின்,
முதலமைச்சரின் விளக்க அறிக்கையில் துப்பாக்கிச் சூடு என்கிற வார்த்தையே இல்லை.துப்பாக்கிச் சூடு என்கிற வார்த்தையை பயன்படுத்தாதது ஏன்?அமைச்சரவை கூட்டத்தை கூட்டி கொள்கை முடிவு எடுத்த பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் தான் அதற்கு பயனுண்டு.துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்ததற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் கூறினார்.மேலும், முதலமைச்சர் பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் தி.மு.க பங்கேற்காது என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.