February 10, 2021
தண்டோரா குழு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கலைத்து விட்டு மு.க.ஸ்டாலினை குறுக்கு வழியில் முதல்வராக்க அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்துச்சென்று கூர்க்கில் தங்க வைத்தபோது திமுக பொது எதிரி என்று தினகரனுக்குத் தெரியவில்லையா என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை, பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியில் பிப்ரவரி 15ஆம் தேதி, அதிமுக சார்பில் 123 ஜோடிகளுக்கு 73 சீர்வரிசை பொருட்களுடன் இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசுகையில்,
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி 123 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் 73 சீர்வரிசை பொருட்களுடன் இலவசமாக திருமணம் செய்து வைக்கப் பட உள்ளதாக கூறினார். நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதிமுக கூட்டத்தில் பேசும்போது அண்ணன் தம்பியாக இருந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டுமென்று தான் பேசியது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது என தெரிவித்த அவர், தொகுதிக்கு 50 பேர் வேட்பாளர்களாக தகுதி இருந்தாலும் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அவ்வாறு பேசியதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு இல்லை எனவும் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பர் எனவும் நம்பிக்கை தெரிவித்த அமைச்சர், மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செய்ததாகக் கூறுகிறார் ஆனால், மற்ற தொகுதிகளில் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணாமல் பெட்டியை வைத்து மனுக்களை வாங்கி வருகிறார் என குற்றம் சாட்டினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கலைத்து விட்டு, மு க ஸ்டாலின் குறுக்கு வழியில் முதலமைச்சராக்க, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்று கூர்கில் வைத்தபோது தினகரனுக்கு திமுக பொது எதிரி என்பது தெரியவில்லையா என கேள்வி எழுப்பினார். திமுகப் பொது எதிரி என்பதால் தான் எம்ஜிஆர் அதிமுகவை தோற்றுவித்தார் எனவும், அதிமுக நூறு ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும் என்ற நிலையை முதலமைச்சரும் துணை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னத்தை பல்வேறு பிரச்சனைகளை கடந்து மீட்டெடுத்து உள்ளதாகவும், முதலமைச்சரை பார்த்து முகஸ்டாலின் பயந்து மிரண்டு போய் உள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், மு க ஸ்டாலின் திமுக வையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அதிமுகவில் பிளவு என்பது சாத்தியமில்லை எனவும் தெரிவித்தார்.