• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை ஊக்குவிக்க அரசு சிறப்புச் செயலர் ஹர் சஹாய் மீனா வலியுறுத்தல்

October 20, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கோவை, ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கான நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அரசு சிறப்புச் செயலர் ஹர் சஹாய் மீனா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசு சிறப்புச் செயலர் ஹர் சஹாய் மீனா தெரிவித்ததாவது:

2030ம் ஆண்டுக்குள் கல்வி, பொதுசுகாதாரம், பாலின வேறுபாடுகளை அகற்றுதல், பொருளாதாரம்,சுற்றுச்சூழல் போன்றவைகளில் நீடித்த நிலையான வளர்ச்சியை அடையும் நோக்கில் ஐக்கியநாடுகள் சபையால் 17 இலக்குகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தின்படி நீடித்த நிலையான வளர்ச்சியை அனைத்து மாவட்டங்கள், வட்டாரங்களிலும் அடைய வேண்டும் என்றும் தமிழ்நாடு உலக அளவில் வளர்ச்சிப் பாதையில் சென்றிட வேண்டும் என்ற நோக்கத்துடனும் மக்கள் நலத்திட்டப்பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டங்களில் மூலம் மாவட்டம், வட்டாரங்களில் ஏற்பட்டுள்ள நீடித்த நிலையான வளர்ச்சியை கண்காணித்து தர வரிசை வழங்கும் பொருட்டு மாவட்ட வாரியான குழுக்கள் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.கிராம ஊராட்சிகளில் வளர்ச்சிகளை அளவிடக்கூடிய 93 குறிகாட்டிகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கூட்டத்தில் அனைத்து இடங்களிலும் அனைத்து வகையிலான ஏழ்மையை ஒழித்தல், பட்டினியை ஒழித்தல், உணவு பாதுகாப்பையும் ஊட்டச்சத்து மேம்பாட்டையும் அடைதல், நிலையான வளங்குன்றா வேளாண்மையை மேம்படுத்துதல், அனைவருக்கும் அனைத்து வகையிலும் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்தல் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல், அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான தரமான கல்வியை உறுதி செய்தல் மற்றும் வாழ்நாள் முழுவதும் கல்வி கற்றலுக்கான வாய்ப்பினை ஊக்குவித்தல், பாலின சமத்துவத்தை எய்துதல் மற்றும் அனைத்து பெண்களும், பெண் குழந்தைகளும் அதிகாரமடைய செய்தல், நிலையான நீர் மேலாண்மையின் வாயிலாக அனைவருக்கும் குடிநீர் மற்றும் சுகாதார வசதி கிடைக்கப் பெறுவதை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு இலக்குகள் குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும் வனங்களில் ஆலமரம், புளி, அத்தி உள்ளிட்ட கனி மரங்களை நட்டு வனப்பகுதிகளை மேம்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் உபயோகத்தினை முற்றிலும் தவிர்க்கும் வகையில் முதலமைச்சரின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும். அரசுத் துறை அலுவலர்கள் அனைவரும் தங்கள் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், திருப்பூர் சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், நீடித்த வளர்ச்சி இலக்குகளின் ஆலோசகர் டாக்டர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மண்டல இணை இயக்குநர் (பொ) புள்ளியியல் துறை அமுதவள்ளி மற்றும் மாவட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க