December 22, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பில் மின் மோட்டாரை பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் நிரந்தரமாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி அணை, பில்லூர் குடிநீர் திட்டம் போன்றவை மூலம் தண்ணீர் பெறப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.கோவை மாநகர பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் தீவிர நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது.இதன் ஒரு பகுதியாக விதிமீறி குடிநீர் எடுக்கப்படுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. குடிநீர் குழாயில் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுபவர்களை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,
“கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள் குடிநீர் இணைப்பில் நேரடியாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பது சட்ட விரோத செயல் ஆகும். மாநகராட்சி ஊழியர்கள் குடிநீர் விநியோகம் செய்யும் பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆய்வின் போது, குடிநீர் இணைப்பில் சட்ட விரோதமாக மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பது தெரியவந்தால்,நிரந்தரமாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்,” என்றனர்.