August 27, 2021
தண்டோரா குழு
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்கான வல்லுநர் குழு தலைவர் சுந்தரதேவன் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் கோவையில் நடைபெற்றது. அதில் கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு கலந்து கொண்டு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதிக்கும் பல்வேறு சிக்கல்கள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தார்.
இதுகுறித்து ரமேஷ் பாபு கூறியிருப்பதாவது:
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நவீன மயமாக்கல் மற்றும் விரிவாக்கத்திற்கு டியுஎப் (TUF) ஸ்கீம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அரசு துறைகளில் கெடுபிடி தவிர்க்கப்பட வேண்டும்.
அறிவுசார் சொத்துரிமை வேண்டி விண்ணப்பிற்க்கும் தொழில் நிறுவனங்களுக்கு போதிய நிதி உதவி அளிக்கும் வகையில் ஒரு தனி அறிவுசார் சொத்துரிமை வழங்கல் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தொழிலாளர் விதிகள் எளிமையாக்கப்பட்டு தளர்த்தப்பட வேண்டும்.
ஸ்டீல் மற்றும் தொழிற்சாலைகள் சார்ந்த மூலப்பொருட்களான கோக், பிக்அயர்ன், ஸ்கிராப், எச்ஆர் சீட், சிஆர் சீட், காப்பர், அலுமினியம், கிராப்ட் பேப்பர், பிளாஸ்டிக் ஆகியவற்றின் விலை 30 முதல் 35 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கோவையில் செயல்பட்டு வந்த செயில் மூலப்பொருட்கள் கிடங்கு அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக 2015ம் ஆண்டு மூடப்பட்டது. அந்த மேம்பால பணிகள் 2017ம் ஆண்டு முடிந்த பிறகும் செயில் மூலப்பொருட்கள் கிடங்கு இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
இது குறித்து மத்திய ஸ்டீல் துறை அமைச்சர் செயலாளர் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர், செயில் நிறுவன தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு பல முறை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கோவையில் செயில் நிறுவனத்தில் மூலப்பொருட்களின் கிடங்கை மீண்டும் திறக்குமாறும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை மானிய விலையில் அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கும் எவ்வித பிணையும் இன்றி 3 கோடி ரூபாய் கூடுதலாக மூன்று ஆண்டு காலத்திற்கான கடன் உதவி வழங்க வேண்டும். வேளாண் துறையை போலவே சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் குறைந்த வட்டி விகிதம் அல்லது 7 சதவீதத்திற்க்கும் குறைவாக வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
முத்ரா திட்டத்தின்கீழ் தகுதியுள்ள நிறுவனங்களுக்கு 15 நாட்களுக்கு கடன் வழங்கப்பட வேண்டும். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அனைத்து வங்கி சேவை கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். பாதுகாப்புத் துறையை சுய சார்பாக இயங்க செய்வதிலும், மேக்இன் இந்தியா திட்டத்திலும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்கு பெறும் வகையில் அவற்றிற்கான நிதி உதவி வழங்கப்பட வேண்டும்.
பெரும்பாலும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தனியார் மற்றும் கூட்டு பங்குதார நிறுவனங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. மற்ற நிறுவனங்களை போல இவர்களுக்கும் 30சதவீதம் வருமான வரி விகிதம் என்பது சிக்கலை உருவாக்கும். எனவே பங்குதார நிறுவனங்களுக்கு குறைக்கப்பட்ட வட்டி விகிதமான 22 சதவீதம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.மின்சாரம் மற்றும் பொட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர வேண்டும்.
15,000 ரூபாய்க்கு மேல் ஊதியம் பெறுவோர்க்கு இஎஸ்ஐ, பிஎப் விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு தற்போது உள்ள குறைந்தது 20 தொழிலாளர்கள் இருந்தால் இஎஸ்ஐ, பிஎப் விதிகள் பெருந்தும் என்பது தொடர வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் பணி புரிவோரை தொழிற்சாலைகளில் பணி அமர்த்துவதன் மூலம் தொழிற்சாலைகளில் தொழிலாளர் தேவை ஓரளவு நிறைவு செய்யப்படும். கோவையில் 1000 முதல் 1500 ஏக்கர் வரை பரப்புள்ள ஒரு மாபெரும் தொழிற்பேட்டை வளாகம் சிட்கோவால் உருவாக்கப்பட வேண்டும்.
கோவை- மதுரை, கோவை – ஓசூர் தொழில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட வேண்டும். இதன் மூலம் தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 ஆண்டுகளில் இருமடங்காகும். இது போன்று பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.