• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாஸ்டர் பிளான் சட்டம் காற்றில் விடப்பட்டு தொடரும் விதிமீறல்கள்…

January 2, 2017 அனீஸ்

நீலகிரி மாவட்டத்தில், கட்டடங்கள் கட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக, மாஸ்டர் பிளான் சட்டப்படி 7 அடிக்கு மேல் கட்டடங்கள் கட்டவும், 30 டிகிரி சரிவான பகுதிகளில் கட்டடங்கள் கட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் சட்டத்தைப் பின்பற்றாமல், அரசு அதிகாரிகளும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அனுமதி வழங்கி விடுகின்றனர் என்று கூறப்படுகிறது. இதற்கு அரசியல்வாதிகளின் தலையீடும் கையூட்டும் காரணம் என்ற புகார் எழுந்துள்ளது.

இவ்வாறு விதிமுறைகளை மீறி, கட்டடங்களைக் கட்டுவதால் அவ்வப்போது பெரும் விபத்து ஏற்பட்டு, அப்பாவித் தொழிலாளர்கள் பலியாவது இம்மாவட்டத்தில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

மேலும், இயற்கை வளங்களை அழித்தும், காட்டு மரங்களை வெட்டியும், இது போன்ற கட்டடங்கள் கட்டப்படுவதால், சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள், சாலை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள, பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இருந்த போதிலும் இக்கட்டுப்பாடுகளை மீறி பல்வேறு முறைகேடுகள் நடப்பது வேதனைக்குரிய விஷயம். குறிப்பாக, 30 டிகிரி சரிவான பகுதிகளில் கட்டடங்கள் கட்ட அனுமதியில்லாத போதும், அதையும் மீறி 90 டிகிரி சரிவான பகுதிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

தற்போது, பல இடங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் அழிக்கப்பட்டு, ரிஸார்ட், காட்டேஜ்களாக மாறி வருகின்றன. தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான விவசாயிகள் கிடைத்த விலைக்குத் தங்களது தேயிலை தோட்டங்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் தேயிலை தோட்டங்கள் அழிக்கப்பட்டு கான்கிரீட் காடுகளாக மாறி வருகின்றன.

கட்டடங்கள் கட்டுபவர்கள் பெரிய பணக்காரர்களாக இருப்பதால் அதிகாரிகளையும், உள்ளாட்சி அமைப்புகளையும் எளிதாக “வளைத்து” விடுகின்றனர். இவர்கள் விதிமுறை மீறிய கட்டடங்களைக் கட்டுவது மட்டுமின்றி, தடையை மீறி பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்துவது, ஆழ்குழாய்க் கிணறுகளை அமைப்பது, மலைகளைக் குடைந்து சாலைகளை அமைப்பது போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

இது போன்ற விதிமுறை மீறிய கட்டுமானப் பணிகளின் போது மண் சரிந்து விழுந்து, பெரிய விபத்துகள் ஏற்பட்டு விடுகின்றன. குறிப்பாக, சில தினங்களுக்கு முன் குன்னூர் அருகேயுள்ள தனியார் எஸ்டேட்டில் சொகுசு பங்களா கட்டும் பணிகள் நடைபெற்றது. அதற்காக செங்குத்தான மலையில் சாலை அமைக்கப் பணிகள் நடைப்பெற்றன. அப்போது, எதிர்பாரத விதமாக மண் சரிந்து விழுந்து நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக, காவல் துறையினர் 8 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாவட்ட நிர்வாகமும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, தற்போது குன்னூரை அடுத்த வண்டிச்சோலை பகுதியில் தனியார் எஸ்டேட்டில் விதிமுறைகளை மீறி சிலர் பாறைகளை உடைப்பது தெரியவந்துள்ளது. இதைப் போன்ற அத்துமீறல்கள் நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

எனவே, மாவட்ட நிர்வாகம் மாஸ்டர் பிளான் சட்டத்தை முறையாகச் செயல்படுத்தி, இயற்கையைப் பாதுகாப்பது மட்டுமின்றி விலை மதிப்பில்லாத மனித உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு.

மேலும் படிக்க