July 26, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பணியாளர்கள் என கூறி தொழில் முனைவோர்களிடம் ஜிஎஸ்டி விவரங்கள் சேகரிக்கப்படுவது குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து டாக்ட் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்கூடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் என கூறி, தொழில் முனைவோர்களிடம் ஜிஎஸ்டி எண் மற்றும் தொழில் விவரங்களை சிலர் சேகரித்து வருகின்றனர்.எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இவர்கள் வருகின்றனர்.
திடீரென எவ்வித முன்னறிவிப்பு முகாந்திரம் இல்லாமல் வந்து ஜிஎஸ்டி உள்ளிட்ட விவரங்களை கேட்பதால் தொழில் முனைவோர்களிடம் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டு வருகிறது.மாநகராட்சி கமிஷனரின் வழிகாட்டுதலின்படி இப்பணியாளர்கள் வருகின்றனரா?, உண்மையில் அவர்கள் மாநகராட்சி பணியாளர்களா? என்பன போன்ற கேள்விகள் தொழில் முனைவோர் மத்தியில் எழுந்துள்ளன.
எனவே கமிஷனர் உத்தரவின்பேரில் இந்த விவரங்கள் சேகரிப்பு நடைபெறுகிறதா? என்பது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்.
மேலும் விவரங்கள் சேகரிப்பதாக இருந்தால் தொழில் அமைப்புகளின் கருத்துகளை அறிந்து, அதற்கு பிறகு சேகரித்தால் தொழில் முனைவோர் மத்தியில் அச்சம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.