March 16, 2021
தண்டோரா குழு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சுவற்றில், நோட்டீஸ் மற்றும் துண்டு பிரசுரங்களை ஓட்டவோ, சுவற்றில் எழுதவோ தடைசெய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட சாய்பாபா காலனி, 6வது தெரு, மணியம் வேலப்பர் வீதி, அம்மாசை வீதி, கே.கே.புதூர், சின்னப்பன் வீதி,கோப்ரேட்டிவ் காலனி, கலெக்டர் சிவக்குமார் வீதி ஆகிய பகுதிகளில் தூய்மைப்பணிகள் நேற்று நடைபெற்றது. அப்போது மழைநீர் வடிகால் கால்வாய்களில் உள்ள நீர் செல்லும் பாதையில் ஏற்பட்ட அடைப்புகள் அகற்றப்பட்டது. டெங்குவை கட்டுப்படுத்த கொசு மருந்து தெளிக்கப்பட்டது. இந்த பணிகளை மாநகராட்சி கமிஷனர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாநகராட்சி கமிஷனர் கூறுகையில்,
‘‘ தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சுவர்களில் நோட்டீஸ், போஸ்டர்கள், துண்டு பிரசுரங்களை ஓட்டவோ சுவர்களில் எழுதவோ தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி சுவற்றில் நோட்டீஸ் ஒட்டினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.
இந்த ஆய்வின் போது மாநகர பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (ஸ்மார்ட் சிட்டி) சரவணக்குமார், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.