May 29, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் வீடு, வீடாக மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தொற்று தொடர்பான ஆய்வினை தினமும் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்திலே கொரோனா நோய் தொற்று பாதிப்பு கோவையில் அதிகம் உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையை காட்டிலும் நோய் தொற்று பரவல் கோவையில் அதிகரித்துள்ளது. கோவையில் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை மாநகராட்சியில் வீடு, வீடாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வினை தினமும் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகத்திற்கு கலெக்ட்ர உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ஆட்சியர் நாகராஜன் கூறியதாவது:
கோவையில் நோய் தொற்று பாதிப்பை விரைந்து கண்டறியும் விதமாக மாநகராட்சியில் 1,500 பேர் நியமிக்கப்பட்டு 3 நாள்களுக்கு ஒருமுறை ஆய்வு வீடு, வீடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தடுப்பு நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக வீடு, வீடாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வினை தினம்தோறும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வந்த சளி மாதிரிகள் அரசு ஆய்வகங்களில் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இதனால் முடிவுகள் கிடைக்க 2 முதல் 3 நாள்கள் வரை ஆனது. இந்நிலையில் சுகாதார துறை சார்பில் எடுக்கப்படும் சளி மாதிரிகள் தனியார் ஆய்வகங்களுக்கும் அனுப்பி பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் 24 மணி நேரத்தில் முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.