April 16, 2018
தண்டோரா குழு
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவியை விருதுநகரில் வீட்டின் பூட்டை உடைத்து போலீசார் கைது செய்தனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியின் கணிதத் துறை பேராசிரியாராக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகள் 4 பேருக்கு போன் செய்து அவர்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு மறைமுகமாக அழைக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பெரும் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரை பணி நீக்கம் செய்து கைது செய்யவேண்டும் என போராட்டம் வலுத்து வருகிறது. இதையடுத்து, நிர்மலா தேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனினும்,அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் கண்டனக் குரல்கள் எழுந்தது.
இதனைத்தொடர்ந்து, கல்லூரிக்கு சென்ற வட்டாட்சியர், ஏ.டி.எஸ்.பி. மதி, டி.எஸ்.பி. தனபால் உள்ளிட்டோர் பேராசிரியை மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர் கல்லூரி முதல்வர் பேராசிரியை நிர்மலா தேவி மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், ஏ.டி.எஸ்.பி. மதி தலைமையிலான போலீசார் அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டிற்கு சென்றனர்.
ஆனால், அங்கு சென்று பேராசிரியையிடம் விசாரணை நடத்த முற்பட்ட போது, அவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வர மறுத்துவிட்டார். மேலும், வீட்டை பூட்டி விட்டு 7 மணி நேரமாக விட்டிற்குள்ளேயே இருந்தார். இதனால், போலீசார் அவரது வீட்டின் முன் காத்திருந்தனர்.
இந்நிலையில்,அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நிர்மலா தேவியை கைது செய்தனர்.