February 28, 2018
தண்டோரா குழு
இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ரீதேவி கடந்த 25ம் தேதி துபாயில் குளியறையில் இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததார்.
இதற்கிடையில், நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக அரசு வழக்கறிஞர் சான்றிதழ் வழங்காததால், அவரது உடல் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடலை பெற இந்திய தூதரக அதிகாரிகளும் அவரது குடும்பத்தினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி உடலை ஒப்படைப்பதற்கான கடிதத்தை துபாய் போலீசார், அவரது உறவினர்கள் மற்றும் இந்தியதூதரக அதிகாரிகளிடம் நேற்று(பிப் 27)வழங்கினர்.
இதையடுத்து, நடிகை ஸ்ரீதேவி உடலை பதப்படுத்தும் பணி நிறைவடைந்து மாலை 6.30 மணிக்கு துபாயிலிருந்து ஸ்ரீதேவி உடல் தனி விமானம் மூலம் இரவு 9.30 மணிக்கு மும்பை கொண்டு வரப்பட்டது.
இதன்பின், இன்று காலை அவரது உடல் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக மும்பையில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும் அங்கு குவிந்தனர்.
பின்னர்,ஸ்ரீதேவி உடலுக்கு மகாராஷ்டிர மாநில அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது.பின் மும்பை ஸ்போர்ட்ஸ் கிளப்பிலிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்,ஸ்ரீதேவியின் உடல் இறுதி ஊர்வலமாக வில்லிபார்லியில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.