December 10, 2021
தண்டோரா குழு
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கப்படும் என்று கடந்த 2017ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து, நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. தொடர்ந்து, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது.
இதனிடையே, ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான தங்களின் எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி உள்ளது என ஜெ.தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில்,இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம்
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.மேலும், மூன்று வாரங்களில் வாரிசு தாரர்களிடம் வேதா இல்லத்தை ஒப்படைக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று வேதா நிலைய சாவியை சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி வழங்கினார். இதைத்தொடர்ந்து, நீண்ட நாட்களுக்கு பின் ஜெயலலிதாவின் வேதா இல்லம்தீபா, தீபக் முன்னிலையில் இல்லம் திறக்கப்பட்டது.