July 15, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதியில் மருந்தகத்தில் சளி, காய்ச்சலுக்கு மாத்திரை வாங்கியவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.
கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. இருப்பினும் தமிழக அளவில் கொரோனா தினசரி பாதிப்பில் கோவை தான் முதலிடத்தில் உள்ளது. 3 -வது அலைக்கு வாய்ப்பு உள்ள நிலையில், கோவை மாநகரில் கொரோனா தொற்று குறித்து தீவிர கண்காணிப்பில் மாநகராட்சி சுகாதார துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
இதன்ஒரு பகுதியாக மாநகராட்சியில் உள்ள மருந்தகங்களில் சளி, காய்ச்சலுக்கு மாத்திரை வாங்குபவர்களின் விபரங்களை கோவை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.இவ்வாறு பெறப்படும் விபரங்களை வைத்து, அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கோவை மாநகராட்சி 36 -வது வார்டு பகுதியில் உள்ள மருந்தகங்களில் சளி, காய்ச்சலுக்கு மாத்திரை வாங்கி சாப்பிட்ட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா கள ஆய்வின் போது கண்டறிந்தார்.
இதையடுத்து மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் சளி,மாத்திரை வாங்கியவர்களின் விபரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று மெடிக்கல் உரிமையாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,”
கோவை மாநகராட்சியில் தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து விட்டது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 50 ஆக குறைந்து விட்டது. இருப்பினும் கொரோனா பரவல் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில்
மருந்தகங்களில் சளி,காய்ச்சலுக்கு மாத்திரை வாங்கி சாப்பிடுபவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. இதன்படி தினமும் அவர்களில் 100 பேர் முதல் 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இதில் 36 -வது வார்டு பகுதியில் மட்டும் 6 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து,
மருந்தகங்களில் சளி, காய்ச்சலுக்கு மாத்திரைகள் வாங்குபவர்களின் விபரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் டாக்டர்களின் பரிந்துரை இன்றி சளி, காய்ச்சலுக்கு மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள ஆஸ்பத்திரியை அணுக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.