February 13, 2021
தண்டோரா குழு
கோவை முருகன்பதி மலைகிராம மக்கள் பயன்படுத்தி வந்த மயானத்தை அகற்ற வந்த தனியார் பொக்லைன் இயந்திரம் சிறை பிடிப்பு, தங்களது மயானம் மற்றும் வழிப்பாதையை முறைப்படி அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவூத்தம்பதி ஊராட்சியில் உள்ள முருகன்பதி மலைகிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் அதே பகுதியில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை கிராமத்தில் அக்கிராமத்தில் இறப்போரை அடக்கம் செய்யும் மயானமாக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மயானத்திற்கு செல்ல அருகே உள்ள ஆற்று வழியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மயானம் மற்றும் வழிப்பாதையை முறைபடுத்தி தரவேண்டும் என கோரி அக்கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு அங்கு பொக்லைன் மற்றும் லாரியோடு வந்த நபர்கள் மயானம் உள்ள இடம் மற்றும் தங்கராஜ் என்பருக்கு சொந்தமான நிலத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்ததாக தெரிகிறது. இதை கண்ட கிராம மக்கள் பணிகளை தடுத்து நிறுத்தினர். மேலும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
இதனிடையே லாரியில் பொக்லைன் இயந்திரத்தை ஏற்றிக்கொண்டு வெளியேற முயன்ற ஓட்டுநரை கிராம மக்கள் சிறை பிடித்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு அங்கு வந்த மதுக்கரை வட்டாச்சியர் விசாரணை மேற்கொண்டார். பின்னர் மயானம் உள்ள இடத்தில் பணிகள் செய்ய கூடாது என தெரிவித்தார். மேலும் நில உரிமையாளரினர் நிலத்தை அளக்கவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.அதுவரை மயானமாக பயன்படுத்தி கொள்ள எந்த தடையும் இல்லை எனவும் கூறினார்.
அப்போது குறிக்கிட்ட கிராம மக்கள் தங்களுக்கு மயானகறையை பெற்றுத்தருவதோடு மயானம் செல்லும் பாதையை சீரமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். எழுத்து பூர்வமாக கோரிக்கையை அளிக்குமாறு வட்டாச்சியர் தெரிவித்தார். இதையடுத்து வாகனம் விடுவிக்கப்பட்டது.