June 8, 2019
தண்டோரா குழு
கால்நடைகளை தாக்கும் சிறுத்தை. கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை மதுக்கரை வனச்சரகம் காந்திநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்தது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் 2 நாய்களை அடித்து இழுத்து சென்றது. அதே போல் 5 க்கும் மேற்பட்ட ஆடுகளையும் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் மாலை நேரங்களில் அப்பகுதியில் மக்கள் செல்லவே அச்சப்பட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள மலையில் குட்டிகளுடன் சிறுத்தை இருப்பதையும் சிலர் கண்டனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் மனு ஒன்று அளித்தனர். அதில் கால்நடை மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்ததாக உள்ள சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் காந்திநகர் பகுதியில் தற்போது சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் கூண்டுக்குள் ஆடு கட்டி வைக்கப்பட்டுள்ளது. உள்ளே இருக்க கூடிய ஆடுக்கும் உயிருக்கு ஆபத்து இல்லாத வகையில் கூண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை பிடிக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.