July 9, 2018
தண்டோரா குழு
கோவை செட்டிபாளையம் சாலையில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனை கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
கோவை செட்டிபாளையம் சாலையில் வடிவு நகர்,பாலாஜி நகர்,லட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இப்பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் விற்பனை கூடம் நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் மூடப்பட்டது.
ஆனால் இந்த கடை மூடப்பட்ட பிறகும்,சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் கடையின் முன்பாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மக்கள் வசிக்கும் இப்பகுதியில் 24 மணிநேரமும் மதுக்கடை திறந்திருப்பதால் அவ்வழியாக செல்லும் இளம்பெண்கள்,சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாகவும்,குறிப்பாக இரவு நேரங்களில் பொது மக்கள் நடமாடுவதற்கே அச்சமான சூழ்நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்த உள்ளனர்.இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த செட்டிபாளையம் போலீசார் பொதுமக்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.