November 27, 2017
தண்டோரா குழு
கோவையில், வரும் டிசம்பர் 3ஆம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக நீதிமன்ற உத்தரவையும் மீறி உயிருள்ள அரசியல்வாதிகள் படத்துடன் வ.உ.சி பூங்கா முதல், விமான நிலையம் வரை தொடர்ச்சியாக கட் அவுட், பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டன.
இந்நிலையில் ரங்கசாமி கவுண்டன் புதூரைச் சேர்ந்த ரகுபதி, சிங்கா நல்லூர் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக போடப்பட்டிருந்த அலங்கார வளைவு எதிர்பாராதவிதமாக மோதி, ரகு கீழே விழுந்தார். அவர் எழுவதற்குள், எதிரே வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே ரகு உயிரிழந்தார். இதையடுத்து அவசர அவசரமாக அலங்கார வளைவு நீக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் பதிவினை செய்துள்ளார். அதில் அவர், “பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது. விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக பேனர்”ஜி”க்கள் உணரவேண்டும்”என்று குறிப்பிட்டுள்ளார்.