May 24, 2018
தண்டோரா குழு
மக்களின் விருப்பத்துடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க விரும்புகிறோம் என ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று முன்தினம் நடைபெற்ற பேரணியில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.60 – க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தினால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் நிறுவனத்தின் 2-வது யூனிட் விரிவாக்கத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.
மேலும் 4 மாத காலத்திற்குள் விரிவாக்கம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் சுற்றுச்சூழல்துறைஅமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டது.இதற்கிடையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை அடுத்து இன்று அதிகாலை 5 மணி முதல் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,தூத்துக்குடியில் போராட்டத்தின் போது நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.அந்த சம்பவத்தால் மிகவும் வேதனை அடைந்துள்ளேன்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.“இந்தச் சுற்றுச்சூழலின் நன்மை, தூத்துக்குடி மக்கள் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சி மீது நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்.அரசு, நீதிமன்றங்களின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை இயங்கியது.
அரசு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை கடுமையாக பின்பற்றி வருகிறோம்.தூத்துக்குடி மக்களின் விருப்பத்துடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க விரும்புகிறோம். தூத்துக்குடியின் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் உதவியாக ஸ்டெர்லைட் ஆலை இருக்கும் என உறுதியளிக்கிறேன்.
பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை அரசின் அனுமதி பெற்றவுடன் மீண்டும் இயங்கும்.நேற்று நடந்த சம்பவம் எனக்கு பெரும் வலியை கொடுத்துள்ளது.இவ்வாறு அனில் அகர்வால் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.