March 21, 2020
தண்டோரா குழு
மகாராஷ்டிராவில் இருந்து கோவை வந்திறங்கிய 10 இளைஞர்களுக்கு ரயில் நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் எழுந்த சந்தேகத்தில் கொரோனா பரிசோதனை செய்ய கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.
கோவை ரயில் நிலையத்திற்கு தினமும் 70ற்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இதில் சாதாரண நாட்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பயணிகளும் சனி,ஞாயிறு மற்றும் விழா நாட்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளும் வருகின்றனர். இப்படியிருக்க உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கோவை ரயில் நிலையத்தில் வரும் பயணிகளுக்கு வைரஸ் அறிகுறிகள் உள்ளதா என்பது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கோவை ரயில்வே நிலையத்தில் கொரோனா கண்காணிப்பை சுகாதாரத் துறையினரும் மருத்துவ குழுவினரும் ரயில்வே போலீசாரும் இணைந்து செய்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று பெங்களூர்-எர்ணாகுளம் இரயிலில் கோவை வந்த 10 மஹாராஷ்டிரா இளைஞர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது.இந்தப் பரிசோதனையில் எழுந்த சந்தேகத்தில் மருத்துவ குழுவினர் மகாராஷ்டிரா இளைஞர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பியுள்ளனர். மேலும் ரயில் நிலையத்தில் பிரத்தியேக ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அவசர நிலையில் வரும் பயணிகளை காலதாமதமாக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய சூழல் உள்ளதாக ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.