December 23, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்ட அளவிலான ஏற்றுமதி முன்னேற்ற குழு கூட்டம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு ஆட்சியர் ராஜாமணி தலைமை தாங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:
கோவை மாவட்டம்,அதிக அளவிலான உற்பத்தி தொழில் சார்ந்த நிறுவனங்களை கொண்டுள்ளது. மாவட்டத்தில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு அவர்களின் திறன்களுக்கு ஏற்றவாறு சுய தொழில் துவங்க அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கி வருகிறது.இந்த திட்டங்கள் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டு வருகிறார்கள். புதிய தலைமுறை தொழிலதிபர்கள், சிறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், வர்த்தகம், நிதி தொடர்பான கல்வி பயிலும் மாணவர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் போன்றோருக்கு, ஏற்றுமதி தொழில் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைபடுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளை தொழிற் கூட்டமைப்புகள் உருவாக்க வேண்டும்.வேளாண்மை, தோட்டக்கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான விழிப்புணர்வுகளை தொழில்முனைவோர்களிடம் ஏற்படுத்த உரிய நடவடிககைகளை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் உதவி இயக்குனர் (வெளிநாட்டு வர்த்தகம்) விஜயலெட்சுமி, இணை இயக்குனர் வேளாண்மை துறை சித்ராதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.