February 14, 2018
தண்டோரா குழு
சென்னையில் மகன் வாங்கிய காரில் மருமகள் செல்லக் கூடாது என்பதற்காக அவரது தாயே காரை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த ஆவடி காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். தாயார் இந்திராணி மற்றும் மனைவி வைஜெயந்திமாலா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மாமியார் மருமகள் பிரச்சனை காரணமாக, ராஜேந்திரன் தாயை தனியாக குடி வைத்துள்ளார்.இந்நிலையில் அண்மையில் ராஜேந்திரன் புதிதாக ஹூண்டாய் ஐ 20 கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
ஆனால், அந்த காரில் மருமகள் வைஜெயந்திமாலா உட்கார்ந்து செல்வது இந்திராணிக்கு பிடிக்கவில்லை. இதனால் அந்த காரை தீவைத்து கொளுத்த திட்டமிட்டுள்ளார். நேற்று இரவு மகன் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த காரை இந்திராணி மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.இதில் வாகனத்தின் முன்பக்கம் முற்றிலும் எரிந்து சேதமடைந்து. சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆவடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
இதையடுத்து, இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அதில் மண்ணெண்ணெய் கேனுடன் இந்திராணி செல்லும் காட்சிகள் அந்த பகுதியில் பதிவாகியிருந்தது. இதையடுத்து இந்திராணியிடம் விசாரணை நடத்தியதில் நான்தான் காருக்கு தீவைத்தேன் என்பதை ஒப்புக் கொண்டார்.