April 14, 2018
தண்டோரா குழு
போலீஸாரை தாக்குவதற்குத்தான் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோமா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இதற்கிடையில் 10-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்க்ஸ் கொல்கத்தா அணிக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது,வேறு மாநிலத்துக்கு ஐபிஎல் போட்டியை மாற்றக்கோரி அரசியல் கட்சியினர், விவசாய அமைப்பினர், திரைத்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.அன்றைய தினம் அண்ணா சாலையில் நடந்த புரட்சி போராட்டத்தால் சென்னையே போரட்டக்களமானது.
மேலும், இந்த போராட்டத்தின் போது போலீஸ்காரர் 3 பேர் மீது கையில் ஒரு கொடியை ஏந்தி கொண்டு ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, காவலர்கள் அளித்த புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட 8 பேர் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான்,
ஐபிஎல்-க்கு எதிரான போராட்டத்தில் காவலரை தாக்கிய இளைஞர் நாம் தமிழர் கட்சியே கிடையாது. போலீஸாரை தாக்குவதற்குத்தான் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோமா. நாம் தமிழர் கட்சியை குற்றவாளி கட்சி போல் சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. போலீஸாரை நாம் தமிழர்தான் தாக்கினார்கள் என்பதை எப்படி முடிவு செய்தீர்கள். முறையாக விசாரணை நடத்தி கைது செய்யுங்கள். தேவையில்லாமல் நாம் தமிழர் கட்சியினரை கைது செய்யாதீர். காவலர்களை தாக்கியது தவறு என்றால் போராடுபவர்களை காவலர்கள் தாக்குவதும் தவறுதான். விலக்கி விட்ட என் மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டுள்ளது. யார் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.