August 19, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் செய்தியாளர்கள் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
கடந்த சில நாட்களுக்கு முன் அன்னூர் பகுதியில் ஏற்பட்ட ஒரு விரும்பதகாத நிகழ்வின் போது ஒருசிலர் முழுமையான நிகழ்வின் ஒளிப்பதிவினை எடிட் செய்து வெளியிட்டது மட்டுமின்றி,உண்மையை திரித்து பரப்பியதும் பல்வேறு தரப்பினரிடையே குழப்பதையும், தேவையில்லாத பிரச்சனைகளையும் ஏற்படுத்துவதாகவும் அமைந்தது.
குறிப்பிட்ட அந்த நபரின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடுநிலை தவறாமல் செயல்பட்டு எளிய மக்களின் நண்பனாக திகழ்ந்து வரும் பல்வேறு பத்திரிகையாளர்கள் களப்பணியாற்றி வரும் அதேவேளையில் ஆங்காங்கே ஒரு சிலர் அரசு துறை அலுவலகங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் நேரடியாகவும், அலைபேசி வாயிலாகவும் அழைத்து செய்தியாளர்கள் என தெரிவித்து சட்டத்திற்கு புறம்பான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இதுதொடர்பான பல்வேறு முன்னனி மற்றும் முதுநிலை செய்தியாளர்களிடமிருந்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வரப்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் இதுபோன்ற புகார்களின் மீது நடவடிக்கை எடுத்திட செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கும், காவல் துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்களும், பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டிய தகவல்களை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வாயிலாகவே வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற பத்திரிகையாளர்கள் எனக்கூறி தவறான செயல்களில் ஈடுபடுவர்கள் மீதான புகார்களை 93852 14793 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு குறுந்தகவல் மற்றும் மனுக்களை ஆதாரங்களுடன் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.