• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போயஸ் தோட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன்? – ஸ்டாலின்

December 24, 2016 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்திற்கு அதிக எண்ணிக்கையிலான போலீசாரும் உயர் அதிகாரிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பது எதற்காக?” என்று சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

“மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்தில் தமிழக காவல்துறை சி.ஐ.டி. பாதுகாப்புப் பிரிவின் முக்கியமான அணியைச் சேர்ந்த, நன்கு பயிற்சியளிக்கப்பட்ட ஏறத்தாழ 240 பேர் இன்னமும் பணியில் உள்ளதாக அறிகிறேன்.

இவர்களில் ஒரு காவல்துறை கண்காணிப்பாளர், 4 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 4 துணைக் கண்காணிப்பாளர்கள், 7 ஆய்வாளர்கள் உள்ளனர். மற்றவர்கள் துணை ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், கான்ஸ்டபிள்கள் ஆகியோர் ஆவர்.

இவர்களில் பலர் மூன்று ஷிஃப்டுகளில் போயஸ் கார்டனில் பாதுகாப்புப் பணியை இன்னமும் மேற்கொண்டிருப்பதுடன், முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவின் வீட்டுக்கு எதிரில் உள்ள வீட்டில் நிரந்தரமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மட்டுமின்றி, சென்னை மாநகரக் காவலைச் சேர்ந்த அதிகாரிகள், காவலர்கள் என கூடுதலாக 60 பேரும் மறைந்த முன்னாள் முதலமைச்சரின் இல்லத்திற்குப் பாதுகாப்புப் பணி என்ற பெயரில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலரும், தாங்கள் இரட்டைப் பணி பார்க்க வேண்டியிருப்பதாகப் புகார் தெரிவிப்பதாக செய்திகள் வருகின்றன. அதாவது, முதலமைச்சர் திரு ஒ.பன்னீர்செல்வம் அவர்களின் இல்லத்தில் பாதுகாப்புப் பணியையும் அதன் பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் பாதுகாப்பு பணியையும் தொடர வேண்டியிருக்கிறது எனத் தெரிவிக்கின்றனர்.

தற்போது போயஸ் தோட்ட இல்லத்தில், அரசியல் சட்டரீதியிலான அதிகாரம் படைத்தவர்களோ, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களோ யாரும் வசிக்கவில்லை.

இந்த நிலையில், அங்கே இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான போலீசாரும், உயர் அதிகாரிகளும் பாதுகாப்பு என்ற பெயரில் பணியில் நியமிக்கப்பட்டிருப்பது, போலீசாரை தனியார் செக்யூரிட்டிகள் போல பயன்படுத்தும் இழிவான செயலாகும்.

காவல்துறையைச் சீரழிக்கும் இத்தகைய அதிகார மீறல்களை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், தி.மு.க. சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும்”.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் அந்த அறிவிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க