July 30, 2018
தண்டோரா குழு
கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த திமுக பிரமுகர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் குள்ளக்காபாளையம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ரா.அம்சகுமார் (62). திமுகவின் நீண்டகால தொண்டரரான இவர் குள்ளக்காபாளையம் 4-வது வார்டு அவைத்தலைவராக இருந்து வந்தார். திமுக சார்பில் நடைபெறும் அனைத்து போராட்டங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த இரு நாட்களாக வீட்டிலிருந்து கருணாநிதி உடல் நலம் குறித்த செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு தொலைக்காட்சியில் கருணாநிதியின் உடல் நலிவுற்ற செய்தியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அம்சகுமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அம்ச குமார் உடலுக்கு பொள்ளாச்சி வடக்கு மத்திய ஒன்றியச் செயலாளர் கோ.பாலகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மோகன் வீரகுமார் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த அம்சகுமாருக்கு நாகரத் தினம் என்ற மனைவி, மாரிமுத்து என்ற மகன், உமா மகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.