April 30, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் விளாங்குறிச்சி, ரத்தினகரி ரோடு, ஏ.எம்.டி நகர், வருமான வரித்துறை ஊழியர்கள் குடியிருப்பு மற்றும் 32வது வார்டுக்குட்பட்ட செங்காளியப்பன் நகர் ஆகிய பகுதிகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள வீடுகளை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவிட வேண்டும். பொதுமக்கள் அவசியமில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சேரன்மாநகரில் செயல்பட்டு வந்த தனியார் பேக்கரி மற்றும் சரவணம்பட்டி சாலையில் செயல்பட்டு வந்த தனியார் பேக்கரிகள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்பட்டதற்காக இரு பேக்கரிகளையும் மூட மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முருகன், மண்டல சுகாதார அலுவலர் சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.