June 4, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி வடக்கு மற்றும் மத்திய மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட துடியலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது.அதே போல் சரவணம்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை நேரில் பார்வையிட்டு பொதுமக்கள் போதிய சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார்.
பின்னர் சின்னவேடம்பட்டி ரோடு சாஸ்தா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் சீராக கிடைக்கப்பெறுகின்றதா? என்பது குறித்து அவர் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து மாநகராட்;சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட ரத்தினபுரி சாஸ்திரி ரோட்டில் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் கண்டறியும் முறைகள், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவினை கண்டறியும் முறைகள், தெர்மா மீட்டர் மூலம் வெப்ப அளவினை கண்டறியப்படும் முறைகள் குறித்து சுகாதார பணியாளர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது வடக்கு மண்டல உதவி கமிஷனர் மகேஸ்கனகராஜ்,மண்டல சுகாதார அலுவலர்,சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.