January 31, 2021
தண்டோரா குழு
பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் போது நானும் போட்டுக்கொள்வேன் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் பேட்டியளித்துள்ளார்.
கோவை மருதமலை முருகன் கோவிலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவரது குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்தார்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரானா வைரஸிலிருந்து உலகம் விடுபடவேண்டும் என்று நேற்று பழனியில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று மருதமலை வந்துள்ளேன். தற்போது கொரோனாவிலிருந்து விடுபட்டு தடுப்பூசி நுழைந்து இருக்கிறோம் என்று தெரிவித்தார். மேலும் நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில் பெருமைபட வேண்டும். சென்ற ஆண்டு நாம் அனைவரும் அச்சத்திலேயே இருந்தோம் இந்த ஆண்டு அச்சத்தில் இருந்து விடுபட விஞ்ஞானிகள் வழிவகை செய்து இருக்கிறார்கள் அதற்காக நாம் அனைவரும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். முன் கள பணியாளர்களாக பணியாற்றிய மருத்துவர்கள் செவிலியர்கள் துப்புரவு பணியாளர்கள் செய்தியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படுகிறது. இது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நன்றி ஊசியாக போடப்படுகிறது. இது பரிசோதனை அல்ல இது அவர்களுக்கு அளிக்கும் பரிசு என்று தான் நான் நினைக்கிறேன். மருத்துவராக மட்டும் நான் பணியாற்றி இருந்தால் நானும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பேன்.
தற்பொழுது ஆளுநராக இருப்பதால் பொதுமக்களுக்கு போடும் பொழுது நானும் போட்டுக் கொள்வேன்.தைப்பூசத்திற்கு விடுமுறை அளித்ததற்கு முதலமைச்சருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். கொரொனாவில் இருந்து மிக விரைவாக நாம் மீண்டு வந்ததற்கு பொதுமக்களுக்கும் வழிகாட்டிய மத்திய அரசு மற்றும் அதனை செயல்படுத்த மாநில அரசுகளுக்கும் எனது நன்றிகள் என்று தெரிவித்தார்.