July 31, 2023
தண்டோரா குழு
கோவை எலும்பியல் சங்கம் வருகிற ஆகஸ்டு மாதம் 4ம் தேதி “எலும்பு மற்றும் மூட்டு தினம் 2023” முன்னிட்டு மாணவர்கள் மற்றும் மக்களிடம் சாலை விபத்து நடந்த உடன் எவ்வாறு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பவேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
கோவை எலும்பியல் சங்கம் வருகிற ஆகஸ்டு மாதம் 4ம் தேதி “எலும்பு மற்றும் மூட்டு தினம் 2023” முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் சாலை விபத்து நடந்த உடன் எவ்வாறு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வுகள் மற்றும் ஆகஸ்ட் 1 முதல் 3 வரை கோவை கங்கா மருத்துவமனை மற்றும் கோவை பிஎஸ்ஜி மருத்துமனைகளில் எலும்புகளின் அடர்த்தியின் அளவை கண்டுபிடிக்கும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
ஓவ்வொரு வருடமும் எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு மக்களுக்கு எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை இந்தியா முழுவதும் எலும்பியல் சங்கம் நடத்தி வருகிறது.
“தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம்” 2012ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 4ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு 2012ம் ஆண்டில் தேசிய எலும்பியல் சங்கத்தின் அப்போதைய தலைவரான பேராசிரியர் டாக்டர் எஸ்.ராஜசேகரன் அதிக முயற்சி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருட “எலும்பு மற்றும் மூட்டு தினம் 2023” குறித்து தமிழ் நாடு எலும்பியல் சங்க நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் தனசேகர் ராஜா, கோவை எலும்பியல் சங்க தலைவர் டாக்டர் மேஜர் கமலநாதன், செயலாளர் டாக்டர் சதீஷ்குமார், சங்க பொருளாளர் டாக்டர் மகேஷ்வரன் ஆகியோர்
கூறியதாவது:–
2023ம் ஆண்டு எலும்பு மற்றும் மூட்டு தினத்தை “வளமான நாட்டிற்கான உறுதியான எலும்பு” என்கிற தலைப்பில் கொண்டாடலாம் என்று தற்போதைய தேசிய எலும்பியல் சங்கத் தலைவர் டாக்டர் அதுல் ஸ்ரீவத்சவா அறிவித்துள்ளார். பொது மக்களிடயே இந்த தலைப்பில் விழ்ப்புணர்வு ஏற்படுத்தப் பலவித நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர்.
டாக்டர் தனசேகர் ராஜா கூறியதாவது:–
உலகளவில் 199 நாடுகளில் நடந்த 2021ம் ஆண்டுக்கான உலக கணக்கெடுப்பின்படி சாலை விபத்துக்களில் 10 பேரில் ஒருவர் இறக்கின்றனர். சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 4,12,432 சாலை விபத்துகள் நடந்ததாகவும், அதில் 1,53,972 மக்கள் இறந்ததாகவும், 3,84,488 பேர் காயங்கள் அடைந்ததாகவும் கூறுகிறது.
இந்த சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் இளம் வயதினர் (18 முதல் 45வயது) 69.3 சதவிகிதமாகும். மேலும் 2021ம் ஆண்டிற்கான இந்திய சாலைவிபத்தில் பற்பல தொழில்களில் வேலை பார்த்துவரும் 19 முதல் 45 வயதுடையவர்கள் 67 சதவிகிதத்தினர் இறக்கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் இந்திய ரோடில் சுமார் 1.5 லட்சம் மக்கள் இறக்கின்றனர், இது சராசரியாக ஒவ்வொரு நாளும் 1130 விபத்துகள் மற்றும் இதனால் 422 இறப்பு அதாவது ஒவ்வொரு மணிக்கும் 47 சாலை விபத்து இதனால் 18 இறப்பு நடக்கின்றது.
இதில் அதிக அளவில் இறப்பவர்கள் விபத்து நடந்து முதல் ஒரு மணி கோல்டன் நேரத்தில் சரியான முதலுதவி கிடைக்காமல் இறக்கின்றனர். விபத்து நடந்து ஒரு மணி நேரத்திற்குள் காவல் துறையினரோ அல்லது பொதுமக்களோ அவர்களுக்கு சரியான முதலுதவி கொடுக்கப்படுமேயானால், பலரை உயிரிழப்பிலிருந்து காப்பாற்ற முடியும்.
சரியான முதலுதவி மற்றும் அடிப்படை லைப் சப்போர்ட், விபத்து நடந்தவுடன் நோயாளிக்கு கிடைக்கும் தொடர்பு தற்போது இல்லை. இதற்காக இந்திய எலும்பியல் சங்கம் ஒரு லட்சம் மாணவர்கள், காவல்துறையினர் மற்றும் பொது மக்களுக்கு இந்த “எலும்பு மற்றும் மூட்டு வாரத்தில் சாலை விபத்து நடந்த உடன் எவ்வாறு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்கிற பயிற்சி அளித்து அவர்களை உயிர் இழப்பை தடுப்பவர்களாக” (Mission One Lac Life Saviours) மாற்ற திட்டம் வகுத்துள்ளனர்.
கோவை எலும்பியல் சங்க தலைவர் டாக்டர் மேஜர் கமலநாதன் கூறியதாவது:–
இதைத்தவிர, மேலும் இந்த எலும்பு மற்றும் மூட்டு வாரத்தில் பிரபலமடைந்த நிபுணர்கள் தேசிய எலும்பியல் சங்க உறுப்பினர்களுக்கு பல தலைப்புகளில் பேச உள்ளனர்.மேலும், ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட 3 வரை கோவை கங்கா மருத்துவமனை மற்றும் கோவை பிஎஸ்ஜி மருத்துமனைகளில் எலும்புகளின் அடர்த்தியின் அளவை கண்டுபிடிக்கும் இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் கங்கா நர்ஸிங் கல்லூரியில் மாணவர்களுக்கு முதலுதவிற்கான பயிற்சியும் உயிர் இழப்பை தடுக்கும் பயிற்சி எலும்பின் ஆரோக்கியத்தை பேணுவது பற்றிய பயிற்சிகளும் நடத்தப்படும்.
இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.