April 16, 2018
தண்டோரா குழு
பேராசிரியை நிர்மலா தேவி மீது எழுந்த புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியின் கணிதத் துறை பேராசிரியாராக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகள் 4 பேருக்கு போன் செய்து அவர்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு மறைமுகமாக அழைக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பெரும் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரை பணி நீக்கம் செய்து கைது செய்யவேண்டும் என போராட்டம் வலுத்து வருகிறது.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின்,
கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியையே தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிப்பதோடு கடும் கண்டனத்திற்குரியது. அவரை உடனடியாக கைது செய்து, எந்த “மேலிடத்திற்கு” இப்படிப்பட்ட ஈனச் செயலில் ஈடுபட முயன்றார் என்பதை விசாரித்து அக்குற்றாவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும். கல்வியை போதிக்க வேண்டிய பேராசிரியர் ஒருவரே கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை நாசமாக்க முயன்ற இந்தப் பிரச்சினையில், வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.