April 16, 2018
தண்டோரா குழு
மாணவிகளை தவறாக வழி நடத்திய பேராசிரியை குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை மதுரை பல்கலைக்கழகம் அமைத்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியின் கணிதத் துறை பேராசிரியாராக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகள் 4 பேருக்கு போன் செய்து அவர்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு மறைமுகமாக அழைக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பெரும் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர்களும் சக மாணவ மாணவிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பேராசிரியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மாணவிகளை தவறாக வழி நடத்திய பேராசிரியை குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை மதுரை பல்கலைக்கழகம் அமைத்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலை. கணிதத்துறை தலைவர் லெல்லீஸ் திவாகர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை உத்தரவிட்டுள்ளார். அக்குழுவில், சிண்டிகேட் உறுப்பினர்கள் லெல்லிஸ் திவாகர், ஆண்டியப்பன், பேராசிரியர்கள் ஜெயபாரதி, வரலட்சுமி, ராஜதபலா ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். மேலும்,இந்த குழு புகாரின் உண்மைத் தன்மை குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.