April 19, 2018
தண்டோரா குழு
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மாணவர்கள்,பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் தகவல் தெரிவிக்கலாம் என ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி சந்தானம் அறிவித்துள்ளார்.
பேராசிரியை நிர்மலா தேவி,விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளுடன் ஆசைக்கு இணங்க கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் வற்புறுத்தினார்.இது தொடர்பாக நிர்மலா தேவி மாணவிகளுடன் பேசிய ஆடியோ ஆதாரம் வெளியானது.
இதையடுத்து புகாரின் பேரில் அருப்புக்கோட்டை போலீஸார் நிர்மலா தேவியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.பின்னர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் நிர்மலா ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது ஏப்ரல் 28-ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில்,இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் இன்று தனது விசாரணையை தொடங்கினார்.இதையடுத்து மதுரை காமராஜர் பல்கலை.,ஆவணங்கள் விசாரணை அதிகாரி சந்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர்,நிர்மலாதேவி விவகாரம் குறித்து மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் செல்லதுரை விசாரணை அதிகாரி சந்தானம் முன்னிலையில் அரசினர் மாளிகையில் இன்று ஆஜரானார்.
இந்நிலையில்,பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 21, 25, 26 ஆம் தேதி ஆகிய 3 நாட்களிலும் மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் காலை 10 மணி முதல் பகல் 1.30 வரை நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக தகவல் தரலாம்விசாரணை அதிகாரி சந்தானம் அறிவித்துள்ளார்.