• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘பேனர் கலாச்சாரத்தை புறக்கணிக்க வேண்டும்’ – மு.க.ஸ்டாலின்

July 1, 2017 தண்டோரா குழு

ஆடம்பரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், அடிக்கு அடி பேனர் வைக்கும் கலாச்சாரத்தை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

“ஆடம்பரங்கள்,அலங்காரங்களைத்தவிர்த்து எளியமுறையில் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் துணைநிற்பதே நமக்குள்ள முக்கியப்பணி.

காலில் விழுந்து காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்கிற அடிமை மனோபாவம் இருக்கக்கூடாது என்பதால் காலில் விழும் கலாச்சாரத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தேன்.என்னுடைய இந்த வேண்டுகோளை ஏற்று, கழகத்தினர் பலரும் காலில் விழும் பழக்கத்தை அடியோடு நிறுத்திவிட்டனர்.

திராவிட இயக்க கழகத்தினரிடம் வெற்று ஆடம்பரத்தைத் தவிர்ப்பதற்கான மற்றொரு அன்பு கோரிக்கையையும் முன்வைத்தேன். பொது நிகழ்ச்சிகளிலும், நேரில் சந்திக்கும் போதும் பயன்தராத பொன்னாடைகளை அணிவிப்பதைத் தவிர்த்து, அதற்குப் பதில், அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் நல்ல புத்தகங்களைப் பரிசளிக்கும்படி, என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு வேண்டுகோள் விடுத்துக் கடிதம் எழுதினேன்.

அந்த கோரிக்கையை ஏற்று, என்னுடைய பிறந்தநாளான மார்ச் 1-ம் தேதி தொடங்கி, இன்றைய நாள் வரை பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், கழகத்தினருடனான சந்திப்புகளிலும் பொன்னாடைக்குப் பதில் புத்தகங்களையே பலரும் வழங்கி வருகின்றனர்.

இதன் காரணமாக, கழகம் நடத்துகின்ற நிகழ்வுகள் பலவற்றிலும் புத்தகங்களைப் பரிசளிப்பதும், அவை கழகத்தின் சார்பிலான படிப்பகங்களில் அறிவு வளர்ச்சிக்குத் துணைநிற்பதுடன், உள்ளூர் நூலகங்களை நாடி வருவோரின் அறிவுப்பசியைத் தணிக்கின்றன.

அதே போல்ஆடம்பரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், அடிக்கு அடி பேனர் வைக்கும் கலாச்சாரத்தை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

காலில் விழுவதை நிறுத்தவேண்டும் என்றபோதும், பொன்னாடைகளுக்குப் பதில் புத்தகங்கள் தரவேண்டும் என்ற போதும் அதன் உடனடி விளைவுகளைக் கண்டு பெருமிதம் கொள்ள முடிந்தது.

ஆனால், ஆடம்பர பேனர்களைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து பல மாதங்களான நிலையில் அதனை அலட்சியப்படுத்துவது போல அண்மைக்காலமாக சில நிகழ்ச்சிகளிலும் பேனர் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கியிருப்பது வேதனையளிக்கிறது.

உங்களில் ஒருவன் என்ற முறையில், இந்த பேனர் கலாச்சாரத்தைக் கைவிடவேண்டும் என மீண்டும் ஒருமுறை அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.இந்த வேண்டுகோள் பயனளிக்கும் என உறுதியாக நம்புகிறேன். இனியும் கழகத்தினர் யாரேனும் பேனர் கலாச்சாரத்தைக் கடைப்பிடித்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கவும் கடமைப்பட்டுள்ளேன். பேனர் கலாச்சாரத்தை வேரறுக்க உறுதியெடுப்போம்”.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க