December 17, 2020
தண்டோரா குழு
கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகள் உமா(47). இவர் போத்தனூர் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் ஹெட் கான்ஸ்டபிளாக பணி புரிந்து வருகிறார்.இவருக்கும் ஆனந்தன் என்பவருக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஆனந்தன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததோடு உமாவை அவ்வப்போது அடித்து கொடுமைப் படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் உமா பெயரில் சென்னையில் உள்ள வீட்டை விற்றுவிட்டு கோவையில் வீடு வாங்க வேண்டும் என ஆனந்தன் அடிக்கடி கூறி வந்தார். மேலும் இது குறித்தும் உமாவிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்திருந்தார். உமா அதற்கு மறுக்கவே கடந்த சில மாதங்களாக அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. இதற்கிடையே ஆனந்தனுக்கு சித்ரா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பின்னர் சித்ரா உடன் காங்கயம் பாளையம் பகுதியில் தனியாக வீடு எடுத்து ஆனந்தன் வசிக்கத் தொடங்கினார். இது குறித்து உமா அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று ஆனந்தன் உமாவின் வீட்டிற்கு வந்து தனது பைக்கை எடுத்து செல்ல சாவியை கேட்டார். அதற்கு உமாவும் அவரது அம்மாவும் மறுக்கவே அவர்களை ஆபாச வார்த்தைகளால் ஆனந்தன் திட்டத் தொடங்கினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு தகராறு முற்றிய நிலையில் ஆனந்தன், உமா மற்றும் அவரது அம்மாவை தாக்கத் தொடங்கினார். மேலும் தலை முடியை பிடித்து இழுத்து சுவற்றில் மோதி காயத்தை ஏற்படுத்தினார். இதில் உமாவிற்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரியவே சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்தனை பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து உமா அளித்த புகாரின் பேரில் ஆனந்தனை கைது செய்து கோவை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது கள்ளக்காதலி சித்ரா தலைமறைவானார். அவரை தேடிவந்த போலீசார் இன்று கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே கைது செய்தனர். கோவையில் பெண் போலீஸின் கணவர் கள்ளக் காதலியுடன் சேர்ந்து மனைவியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.