October 4, 2018
தண்டோரா குழு
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 பைசா குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.
வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால், மத்திய அரசு வரிவிதிப்பை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. செப்டம்பர் 10-ம் தேதி இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே ராஜஸ்தான், ஆந்திரபிரதேசம், மேற்கு வங்காளம் மாநிலங்கள் வாட் வரியை குறைத்தது. இருப்பினும் பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வில் மாற்றம் இல்லாமல் சென்றது.
இந்நிலையில், ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு, வர்த்தக பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடியின் தலைமையில் மூத்த மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டதிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி,
அமெரிக்காவில் வட்டி விகிதம் 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், சர்வதேச சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய பொருளாதார நிலையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. சர்வதேச சந்தைகளில் கரன்சி மற்றும் பங்கு வர்த்தகத்தில் வீழ்ச்சி காணப்படுகிறது. பண வீக்கத்தை மத்திய அரசு கட்டுக்குள் வைத்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்பட்டதால் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. விலையை கட்டுப்படுத்த கடன் வாங்குவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.
பெட்ரோலிய அமைச்சகத்துடன் நிதி அமைச்சகம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.50 குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் 1 ரூபாயும், மத்திய அரசு கலால் வரியில் 1.50 ரூபாயும் குறைக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகளும் ரூ.2.50 குறைக்க வலியுறுத்தப்படும். இதனால், மத்திய அரசுக்கு ரூ.22 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். இதுதொடர்பாக மாநிலங்களுக்கு கடிதம் எழுதப்படும். மத்திய அரசின் வலியுறுத்தலை மாநில அரசுகள் ஏற்றால் விலை ரூ.5 குறைய வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.