May 17, 2018
தண்டோரா குழு
நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் 6 மாதம் சிறை சென்ற முன்னாள் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் புதிய கட்சி தொடங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் 20 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டை நீதிபதி கர்ணன் முன்வைத்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக பதிவு செய்து, அவர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஆஜராகாததால், நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.இதற்கிடையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தன் முன்பு, ஆஜராக கர்ணன் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி கர்ணனுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் உச்சநீதிமன்றம் கர்ணனுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது.
இதனையடுத்து, தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை வந்தனர். பின்னர் கோவையில் பதுங்கி இருந்த கர்ணனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, 6 மாத சிறை தண்டனை காலம் முடிந்து வெளியே வந்துள்ள முன்னாள் நீதிபதி கர்ணன் டெல்லியில் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து, “ஊழல் எதிர்ப்பு சக்தி கட்சி (Anti-Corruption Dynamic Party)” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை, கர்ணன் துவக்கியுள்ளார். மேலும், வரும் 2019-ம் ஆண்டில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்த புதிய கட்சிகளமிறங்க போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் நீதிபதி கர்ணன் கூறுகையில்,
நாட்டிலிருந்து ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதே என் கட்சியின் நோக்கம். கட்சி பெயர் பதிவு மற்றும் சின்னம் தொடர்பாக, நாங்கள் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளோம். ஊழல் எதிர்ப்பு சக்தி கட்சி ஒரு தேசிய கட்சியாக செயல்படும். தேர்தலில் போட்டியிட பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். கட்சிக்கு பிரச்சாரம் செய்வேன்.மோடி எம்.பி.யாக உள்ள வாரணாசி தொகுதியில் நான் போட்டியிட போவதில்லை. அங்கு எனது கட்சி சார்பில் பெண் வேட்பாளரை நிறுத்துவேன். நாடு முழுவதும் தலித்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தலித்துக்களை சிறுபான்மையினரை அனைத்து மாநில அரசும் மத்திய அரசும் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.