February 20, 2021
தண்டோரா குழு
கோவை கௌமார மடாலய வளாகத்தில் புதிதாக அமையபெற்ற ராஜகோபுரத்தின் கும்பாபிஷேக விழா வரும் 25 ம் தேதி நடைபெற உள்ளது.இதில் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தலைமை விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் 130 ஆண்டுகள் பாரம்பரியமிக்க கௌமார மடாலய வளாகத்தில் ,கொங்கு மண்டலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் தஞ்சை பெரிய கோவிலின் ராஜகோபுரத்தை நினைவு படுத்தும் வகையில் கோவிலின் வடக்கு பகுதியில் 50 அடி உயரத்தில் புதிதாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வரும் 25 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
இதில் கௌமார மடாலயத்தின் தலைவர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் மற்றும் பேரூராதினம் தவத்திரு மருதாச்சல அடிகளார் ஆகியோர் பேசுகையில்,
கௌமார மடத்தின் வளாகத்தில் கடந்த 1908 ஆண்டு அருள்மிகு தண்டபாணி கடவுள் கோவில் அமைக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து திருக்கோவில் வளாகத்தில் விநாயகர் கோவில் அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில் சூரியன் கோவில் பைரவர் கோவில் சனி பகவான் கோவில் என தனித்தனியாக உருவாக்கப்பட்டதாகவும், கடந்த 2009ஆம் ஆண்டு ஆலயம் 16 ஆயிரம் சதுர அடியில் விரிவுபடுத்தப்பட்டு திருப் பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதாக குறிப்பிட்ட அவர் தற்போது கொங்கு மண்டலம் முழுமைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் ராஜ கோபுரத்தை நினைவுபடுத்தும் வகையில் கோவிலின் வடக்குப் பகுதியில் மூன்று நிலைகளுடன் 50 அடி உயரத்தில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டு இதன் கும்பாபிஷேக விழா வரும் 25ம் தேதி நடைபெற உள்ளதாகவும் இதில் தலைமை விருந்தினராக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் விழாவில் தமிழகத்தில் முக்கிய ஆதீனங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள் தொழிலதிபர்கள் கல்வியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.