• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.ஆர்.நடராஜன் எம்பி நிதியில் ரூ 4 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் அரசு பள்ளி நூலகங்களுக்கு ஒப்படைப்பு

December 10, 2020 தண்டோரா குழு

அரசு பள்ளியில் உள்ள நூலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் இடம்பெற கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 4லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதனை ஒப்படைக்கும் நிகழ்வு வியாழனன்று நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்காக ரூ 4 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் பெறுவதற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். இதனை பாரதிபுத்தகாலயம் பதிப்பின் மூலம் சமூகம், விஞ்ஞானம் உள்ளிட்ட தலைப்புகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புத்தகங்கள் வரவழைக்கப்பட்டது. இதனை அரசு பள்ளி நூலகங்களுக்கு ஒப்படைக்கும் விழா கோவை புனித மைக்கேல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமை தாங்கினார்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் முன்னிலை வகித்தார். முன்னதாக தலா ஒரு பள்ளிக்கு ரூ 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் ஒண்டிபுதூர், சிங்காநல்லூர், சித்தாபுதூர், ஒப்பணக்காரவீதி, ராமநாதபுரம், ரத்தினபுரி, சின்னதடாகம், வெள்ளக்கிணறு, இருகூர், கண்ணம்பாளையம், சூலூர், மணியக்காரண்பாளையம், காளப்பட்டி, டவுன்ஹால், உடையாம்பாளையம், சீரநாயக்கண்பாளையம் உள்ளிட்ட 16 அரசு பள்ளிகளுக்கு இந்த புத்தகங்கள் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக பி.ஆர்.நடராஜன் எம்பி இந்நிகழ்வில் பேசுகையில்,

அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்திற்கு வெளிச்சத்தை பாய்ச்சுகிற அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாவட்டத்தின் கல்வி அதிகாரிகளின் உழைப்பிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு வீணாகிவிடக்கூடாது என்பதற்காகவே அரசியல் இயக்கங்களாக இருக்கிற நாங்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்காக தொடர்ந்து போராடி வெற்றிபெற்றுள்ளோம். இந்த வெற்றி உங்களுக்கு சொந்தமானது. நமது மாவட்டம் தொடர்ந்து கல்வி வளர்ச்சியில் முக்கிய இடம் பிடித்து வருகிறது என்றால் இதற்கு உங்களது அயராத உழைப்பே காரணமாகும். இதனை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கத்திற்காகவே தமிழகத்தின் சிறந்த பதிப்புகளில் ஒன்றான பாரதி புத்தகலாயத்தின் பதிப்புகளில் இருந்து அரசுப்பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்களை பெற்றுள்ளோம். புத்தகங்களே மனிதனை முழுமையாக்கும். வாசிப்பே மனித நேசிப்பை அதிகரிக்கச்செய்யும்.இதனை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதனைத்தொடர்ந்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பேசுகையில், அரசுப்பள்ளிகளின் வளர்ச்சியில் கல்வித்துறையைத் தாண்டி பல நல்ல உள்ளங்கள் அக்கறை கொண்டிருப்பதால்தான் பல சாதனைகளை செய்ய முடிகிறது. பள்ளிகளுக்கு கட்டிடம், ஆசிரியர்கள் எவ்வளவு முக்கியமோ அதனைப்போன்றே நூலகங்கள் மிக முக்கியமானது.

நமது அரசுப்பள்ளி நூலகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் ரூ 4 லட்சத்திற்கு புத்தகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. புத்தகங்களை ஆசிரியர்கள் முழுமையாக படிக்க வேண்டும். இதன் பயன் ஐந்து லட்சம் மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஆசிரியர்ளுடைய அயராத உழைப்பால்தான் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் நமது மாவட்டத்தில் 15 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இடம் கிடைத்துள்ளது. இதில் மின்சார வசதியில்லாத பழங்குடி மாணவி, ஆட்டோ ஓட்டுனர் பிள்ளை என்பது எல்லாம் எவ்வளவு நெகிழ்ச்சியான செய்தி.எவ்வித ரத்த பந்தமும் இல்லாமல் நமது ஆசிரியர்கள் இந்த பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கான உழைப்பை பார்க்கிறபோது இன்னும் இன்னும் இந்த பிள்ளைகளுக்காக உழைக்க வேண்டும் என்கிற உற்சாகமும், உந்துதலும் ஏற்படுகிறது. இதற்கு ஆசிரியர்கள் நாம் தொடர்ந்து வாசிக்க வேண்டும். எனது அனுபவத்தில் இருந்து சொல்கிறேன் புத்தகளே நம்மை ஆற்றுப்படுத்தும். திறமையை அதிகரிக்க செய்யும், கவலைகளை மறக்கடிக்கச்செய்யும். நான் பள்ளிகளுக்கு ஆய்வுக்கு செல்கிற போது நூலகங்களில் உள்ள பல புத்தகங்களின் அட்டைகூட திறக்கப்படாமலேயே இறப்பதை பார்த்து கவலைப்பட்டிருக்கிறேன். படித்து கிழி என்பார்கள் அது புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம். கிழிகிற வரையில் புத்தகங்களை படிக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு அரை மணிநேரமாவது ஆசிரியர்கள் ஏதாவது புத்தகங்களை படிக்க வேண்டும். அதுவே தலை சிறந்த மாணவர்களை உருவாக்கும் நமது முயற்சிக்கு துணை நிற்கும் என்றார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் மைக்கேல் பள்ளி தலைமை ஆசிரியர் ஆல்பர்ட். மார்க்சிஸ்ட் கட்சியின் யு.கே.சிவஞானம் மற்றும் அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியகள் மற்றும் ஆசிரியர்கள் ஊழியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க