June 11, 2018
தண்டோரா குழு
+1, +2 வகுப்பில் மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு மட்டுமே நடத்தப்படும் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளில் ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 வகுப்புக்களுக்கு மொழித் தேர்வுகள் தமிழ் முதல் தாள், தமிழ் 2 ம் தாள், ஆங்கிலம் முதல் தாள், ஆங்கிலம் 2 ம் தாள் என இதுவரை தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த தேர்வுகள் இனி தமிழ், ஆங்கிலம் என்று மட்டுமே நடத்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மாற்றம் இந்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு சார்பில் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும், அரசாணையில் மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாடத்திற்கு இரண்டு தாள்கள் வீதம் மாணவர்கள் தேர்வு எழுதுவதால் ஏறத்தாழ பத்து நாட்கள் செலவிடப்படுவதாகவும், மொழிப்பாடம் ஆங்கிலப் பாடத்தில் இரு தாள்களில் இரு தேர்வுகள் எழுதுவதன் காரணமாக தேர்வு நாட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 8 தேர்வுகள், இனி 6 தேர்வுகளாக குறைக்கப்படும் என்பது குறிபிடத்தக்கது.