July 6, 2018
தண்டோரா குழு
சி.ஆர்.எஸ் மென்பொருள் மூலம் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை இனி ஆன்லைனில் வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.இங்கு ஆன்லைன் வசதி இருந்தாலும், முறையாக பின்பற்றாததால் தாமதம் ஆகிறது.
இந்நிலையில் இனி ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில்,பிறப்பு, இறப்பு பதிவுகளுக்கு புதிய Common CRS மென்பொருள் மாநிலந் தழுவிய அளவில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் மூலம் வழங்கப்படும் ஆவணங்கள் சட்டபூர்வமாக செல்லும்.அவற்றை அதிகாரப்பூர்வ சான்றுகளாக கொள்ளலாம். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சம்மந்தப்பட்ட பதிவாளர்கள் மூலம் ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். புதிய மென்பொருள் தவிர வேறு மென்பொருள் மூலமோ, மேனுவலாகவோ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.