February 7, 2018
தண்டோரா குழு
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஒரே இடத்தில் துப்பாக்கி முனையில் 76 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பூந்தமல்லி அருகே ரவுடி பினுவின் பிறந்தநாள் விழாவை கொண்டாட, தேடப்படும் ரவுடிகள் அனைவரும் ஒரே இடத்தில் கூடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, 2 உதவி ஆணையர்கள், 10 ஆய்வாளர்கள், 15 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனியார் வாகனங்களில் ரகசியமாக சென்று ரவுடிகளை சுற்றிவளைத்த போலீசார் ஒரே இடத்தில் துப்பாக்கி முனையில் 76 ரவுடிகளை கைது செய்தனர்.
சம்பவ இடத்தில் இருந்து வீச்சரிவாள், கத்தி, துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த 8 கார்கள், 38 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இரவோடு இரவாக மாங்காடு, போரூர், பூவிருந்தவல்லி மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனைதொடர்ந்து ரவுடிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை பார்வைக்கு வைத்துள்ளனர். பிடிப்பட்ட ரவுடிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகள் உள்ளன. 8 பேர் மீது கொலை வழக்கு உள்ளது. பலர் மீது கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன.
மேலும், தப்பி ஓடிய ரவுடிகளை தேடும் பணியில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ரவுடிகளிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.