November 18, 2021
தண்டோரா முழு
பிராமண சமூகத்தைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் ஆண்களுக்குத் தமிழ்நாட்டில் திருமணத்திற்குப் பெண் கிடைக்காததால், தமிழ்நாட்டில் பிராமண சமூகத்திற்கான சங்கம் ஒன்று, அதே சமூகத்தைச் சேர்ந்த பெண்களைத் திருமணத்திற்காக உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் வரன் தேடவுள்ளதாக அறிவித்துள்ளது.
எங்கள் சங்கத்தின் சார்பில் நாங்கள் சிறப்பான இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளோம்’ என்றும் தமிழ்நாடு பிராமின் அசோசியேஷன் என்ற அமைப்பின் தலைவர் நாராயணன் தங்கள் சங்கத்தின் மாத இதழில் கடிதம் ஒன்றை எழுதிக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் தோராயமாக 30 முதல் 40 வயது வரையுள்ள சுமார் 40 ஆயிரம் தமிழ்ப் பிராமண ஆண்கள் தமிழ்நாட்டில் திருமணம் செய்ய பெண்கள் இல்லாமல் இருப்பதாகக் கூறியுள்ளார். `10 பிராமின் ஆண்கள் திருமணம் செய்யும் வயதில் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு ஏற்றவாறு வெறும் 6 பெண்கள் மட்டுமே தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாராயணன் தனது கடிதத்தின் டெல்லி, லக்னோ, பாட்னா ஆகிய நகரங்களின் இந்த விவகாரம் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவர் எனவும் கூறியுள்ளார். `இதற்கான பணிகளை நான் தொடங்கியுள்ளேன்’ என்று அவர் கூறியுள்ளார்.
பிரமாண சமூகத்தைச் சேர்ந்த பல தரப்பு மக்கள் இந்தத் திட்டத்தை வரவேற்று இருந்தாலும், அந்தச் சமூகத்தில் இருந்தே இந்தத் திட்டம் குறித்து எதிர்க்குரல்கள் எழுந்துள்ளன. கல்வியாளரான எம்.பரமேஸ்வரன் என்பவர், `தமிழ்ப் பிராமின் பெண்கள் திருமண வயதில் குறைவாக இருந்தாலும், ஆண்களுக்குத் திருமணத்திற்காகப் பெண்கள் கிடைக்காமல் இருப்பதற்கான காரணம் இது மட்டுமே இல்லை’ என்று கூறியுள்ளார்.
ஆண்களின் பெற்றோர் ஆடம்பரமான திருமண நிகழ்ச்சியை எதிர்பார்ப்பதே இந்தச் சிக்கலுக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், திருமணத்திற்குப் பெண்ணின் குடும்பத்தின் மீது அனைத்து செலவுகளையும் திணிப்பதே பிராமண சமூகத்தின் இந்த நிலைக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார். `ஆடம்பரமான திருமணங்கள் அந்தஸ்தின் சின்னமாக மாறியுள்ளன. இந்தச் சமூகம் முற்போக்காகச் சிந்தித்து, இத்தகைய பிற்போக்குத்தனங்களைக் கைவிட வேண்டும்’ என அவர் கூறியுள்ளார்.
இந்தக் காலத்தில் தமிழ் பிராமின் திருமணங்கள் 2 முதல் 3 நாள்கள் வரை நடக்கின்றன. இதில் வரவேற்பு, திருமணத்திற்கு முன், பின் எனப் பல சடங்குகள் ஆகியவற்றைச் சேர்த்து, நகை, திருமண மண்டப வாடகை, உணவு, சீதனம் முதலான அனைத்து செலவுகளும் இந்தக் காலத்தில் சுமார் 12 முதல் 15 லட்சம் ரூபாய் வரை வருகிறது’ என அவர் கூறியுள்ளார்.