May 11, 2021
தண்டோரா குழு
பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா. இவர் திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகில் உள்ள வேப்பிலையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆண்பாவம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.அதன் பின் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நெல்லை சிவா, வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நெல்லை சிவா, டி.வி.தொடர் களிலும் நடித்துள்ளார்.கிணற்றைக் காணோம் என்று வரும் வடிவேலு டார்ச்சரால், இன்ஸ்பெக்டராக இருக்கும் சிவா, வேலையை விட்டே போவது போன்ற காமெடி காட்சி பிரபலமான ஒன்று.
திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த நெல்லை சிவா, ஊரடங்கு காரணமாக தற்போது சொந்த ஊரில் இருந்துள்ளார். இந்நிலையில், சிவாவுக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உயிரிழந்தார்.
அவர் இறுதிச்சடங்கு பணகுடியில் நாளை நடக்கிறது.
நெல்லை சிவாவின் மறைவை அடுத்து சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.