July 20, 2018
தண்டோரா குழு
மக்களவையில் பேசி முடித்த ராகுல் காந்தி திடீரென பிரதமர் நரேந்திர மோடியை கட்டித் தழுவியது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.
மக்களவை இன்று காலை கூடியதும்,எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதையடுத்து காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,
மத்திய அரசின் மீதும்,பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்ததார்.ஜிஎஸ்டி,பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி மோடி ஏமாற்றியுள்ளார்.விவசாயிகளும்,இளைஞர்களும் மத்திய அரசின் பொய் வாக்குறுதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அமித்ஷா மகன் ஜெய் ஷா விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்? என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
மேலும்,ஃபிரான்ஸ் நாட்டுடனான ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில், ரகசியம் காக்கும் உடன்படிக்கை இருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறுவதாக ராகுல்காந்தி குறிப்பிட்டார்.ஆனால் தாம் தனிப்பட்ட முறையில் ஃபிரான்ஸ் அதிபரை சந்தித்த போது,அப்படிப்பட்ட ரகசியம் காக்கும் உடன்படிக்கை ஏதும் இல்லை என அவர் திட்டவட்டமாகக் கூறியதாக ராகுல்காந்தி தெரிவித்தார்.
இதையடுத்து, இதற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் ஆட்சேபணையும் எதிர்ப்பும் தெரிவித்தார்.ராகுல்காந்தி மக்களவை விதிகளுக்கு புறம்பாக பேசுவதாக அமைச்சர் அனந்தகுமார் குற்றம்சாட்டினார்.இதனைத்தொடர்ந்து ராகுல்காந்தியை பேச அனுமதிக்கக் கூடாது என பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
பாஜக எம்.பி.க்களின் அமளி ஓயாமல் நீடித்த நிலையில்,தமது பேச்சை ராகுல் காந்தி முடித்துக்கொண்டார்.பின்னர்,யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் மோடி அமர்ந்திருந்த இடத்திற்கே சென்ற ராகுல் காந்தி அவரை கட்டித் தழுவினார்.இதையடுத்து நடந்து வந்த அவரை பிரதமர் மோடி திரும்ப அழைத்து கை குலுக்கினார்.