April 24, 2018
தண்டோரா குழு
பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல திட்டம் வகுத்திருப்பதாக வாட்ஸப்பில் வைரலான விவகாரத்தில் கோவையை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (35) கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளரிடம் 3 கார்களை அடமானம் வைத்து ₹2 லட்சம் கடன் வாங்கினார்.இதனையடுத்து கார்களை மீட்க பணத்துடன் வந்த பிரகாஷிடம் உக்கடத்தை சேர்ந்த ஒருவரிடம் கார் இருக்கிறது. அவரிடம் பணத்தை கொடுத்து கார்களை மீட்கலாம் என டிராவல்ஸ் உரிமையாளர் கூறியுள்ளார்.
அப்போது, பிரகாஷ், உக்கடத்தை சேர்ந்த நபரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் பேசியது வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது.அதில் பேசியவர் “என்னைய சாதாரணமாக நெனைச்சுட்டியா,₹5 லட்சம் கொடுத்தா உன் வண்டி கிடைக்கும். உனக்காக ஒரு லட்சம் குறைச்சிருக்கிறேன். என் மீது 22 கேஸ் இருக்கு.எனக்கு உன் மாதிரி ஆளுங்கள மிரட்டி புடுச்சு காசு வாங்குற பழக்கம் கிடையாது. என்னோட லெவல் வேற மாதிரி.நான் யாரு தெரியுமா, அத்வானிக்கு குண்டு வெச்சது யாருன்னு நெனைக்கிறே.என்.ஐ.ஏ விசாரணைய பாத்துட்டேன். அடுத்து மோடிய கொல்லப்போறோம். இது உனக்கு தெரியுமா”என மிரட்டலாக பேசியுள்ளார்.
இதையடுத்து,மோடியை கொல்ல திட்டம் தீட்டியதாக குனியமுத்தூர் சாரமேடு பகுதியைச் சேர்ந்த ரபீக்(50) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.பின்னர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.இவர் ஏற்கனவே கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.