November 17, 2020
தண்டோரா குழு
பிஎஸ்ஜி மருத்துவமனை நரம்பியல் துறை சார்பாக உலக வலிப்பு நோய் தினம் கடைபிடிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17ஆம் தேதி உலக வலிப்பு நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நரம்பியல் துறை சார்பாக இந்த தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்வானது பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் J.S.புவனேஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் பி எஸ் ஜி மருத்துவமனையின் நரம்பியல் சிகிச்சை துறை தலைமை மருத்துவர். ஆர்.பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மருத்துவர் குழுவினர் அனைவரும் பங்கு பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வலிப்பு நோய்க்காக சிகிச்சை பெறும் நோயாளிகள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். இவ்விழாவிற்கு தலைமையேற்று நடத்திய பிஎஸ்ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் அவர்கள் பேசிய போது, வலிப்பு நோய் வந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நோயாளிகள் உள்ளாகும் சிரமங்களை பற்றியும் அதனை மருத்துவ ரீதியாக அதை எதிர்கொள்வது எப்படி என்பது பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் உடன் பங்கேற்று பேசிய பிஎஸ்ஜி மருத்துவமனை நரம்பியல் துறை சிகிச்சை தலைமை மருத்துவர்.ஆர்.பாலகிருஷ்ணன்,
பேசும்பொழுது வலிப்பு நோய் வந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் தங்களது வாழ்நாளில் சாதாரண ஆட்களை போல தினசரி அன்றாட செயல்பாடுகளை கவனிக்க முடியாத சூழல் இருப்பதாக எண்ணி தங்களை தாங்களே மனரீதியாக தனிமைப்படுத்திக் கொண்டு வருவதாக கூறினார். அவரிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பெரும்பாலோனோர் மனதில் தோன்றக்கூடிய ஒரே மாதிரியான அடிப்படை சந்தேகங்களை தம்மிடம் கேட்பதாகவும், அதற்கான விளக்கத்தை தொகுத்து இதனை ஒரு புத்தகமாக வெளியிடுவதாகவும் தெரிவித்தார். எடுத்துக்காட்டாக வலிப்பு நோய் வந்தவர்கள்,
வலிப்பு நோய் வந்தவுடன் என்ன செய்ய வேண்டும்.?அவர்கள் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரை சாப்பிட வேண்டுமா.? சாதாரண ஆட்களை போல வாழ என்ன வழி.?
திருமணம் செய்து கொள்ளலாமா.?
குழந்தை பெற்றுக் கொள்ளலாமா.?
தாம்பத்திய உறவில் ஈடுபடலாமா.?
வாகனம் ஓட்டலாமா.? போன்ற மனதில் தோன்றும் எண்ணற்ற சந்தேகங்களுக்கு இந்த புத்தகத்தில் உள்ள தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.
இந்தப் புத்தகத்தை பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் டாக்டர். ஜெ.எஸ். புவனேஸ்வரன் வெளியிட நோயாளிகள் அனைவரும் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பிஎஸ்ஜி மருத்துவமனையின் மற்ற துறை சார்ந்த மருத்துவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் பங்குபெற்றனர்.