February 24, 2017
தண்டோரா குழு
மலையாள நடிகை பாவனாவுக்கு நேர்ந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நடிகை மஞ்சு வாரியார் அறிவித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகை பாவனா சமீபத்தில் கொச்சியிலிருந்து படப்பிடிப்பு முடிந்து வரும் வழியில் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அவருக்கு ஆதரவாக மலையாளத் திரையுலகமே ஒருங்கிணைந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மலையாள முன்னணி நடிகையும் பாதிக்கப்பட்ட பாவனாவின் நெருங்கிய தோழியுமான நடிகை மஞ்சு வாரியார் கேரள தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை மஞ்சு வாரியார் கூறாவிட்டாலும் அவரது நட்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.
எனினும், தற்போது இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பல்சர் சுனில் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ளனர். இவர்களுக்குப் பின்னால் யாரோ இருக்கின்றனர் என்று பாவனாவுக்கு நெருக்கமானவர்கள் சந்தேகப்படுகிறார்கள்.