March 17, 2018
தண்டோரா குழு
பாம்புகளுடன் விளையாடும் மலேசிய பாம்பு காதலர், விஷப் பாம்பு கடித்து பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்தவர் அபு ஜரின் ஹூசைன் (33).அங்குள்ள தீயணைப்பு துறையில் பணியாற்றும் இவர், பாம்பு பிடிப்பதில் வல்லவர். எங்கு பாம்பு என்றாலும் ஆர்வமாகப் போய் பிடிக்ககூடியவர். ஏராளமான பாம்புகளைப் பிடித்துள்ள ஹூசைன் பாம்பு காதலர் என்றும் அழைக்கப்படுகிறார். இதுமட்டுமின்றி பாம்புகளோடு துணிச்சலாக செல்ஃபி எடுத்துக்கொள்வது. தான் பிடித்த விஷப் பாம்புகளை ஆய்வுக்காக வீட்டில் வளர்ப்பதும் இவரது வழக்கம். பிறகு சில மாதங்கள் கழித்து அதைக் காட்டுக்குள் விட்டுவிடுவார். பலமுறை விஷப்பாம்பிடம் கடியும் வாங்கியுள்ளார். 2015-ம் ஆண்டு பாம்பு கடித்து 2 நாள் கோமோ நிலையில் கூட இருந்துள்ளார்.மேலும், தீயணைப்புவீரர்களுக்கு பாம்பு பிடிப்பது குறித்தும், அதை பற்றி அறிந்துகொள்வது பற்றியும் வகுப்பு எடுத்துள்ளார் ஹூசைன்.
இந்நிலையில் பெண்டாங் பகுதியில் பாம்பு பிடிக்கும் பணியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது விஷப்பாம்பு ஒன்று அவரை எதிர்பாரதவிதமாகக் கடித்தது. இதையடுத்து மயக்கமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏராளமான விஷப் பாம்புகளைப் பிடித்துள்ள ஹூசனை பாம்பு கடித்து பலியானது மலேசிய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.