February 1, 2020
தண்டோரா குழு
மத்திய பட்ஜெட் 55 சதவீதம் தான் திருப்தி அளித்துள்ளதாக இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
2020-2021 நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த சூழலில், பட்ஜெட் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபையின் கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்திய வர்த்தக சபை கோவை கிளையின் தலைவர் லட்சுமி நாரயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்த பட்ஜெட்டில் ஆட்டோ மொபைல் தொழில் துறை சந்தித்துவரும் பொருளாதார மந்த நிலையை சீராக்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. புதிய நிறுவனங்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயம், நீர் சேமிப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி திரும்ப பெறும் முறை மற்றும் ஜி.எஸ்.டி.,யில் உள்ள சிக்கல்கள் குறித்த அறிவிப்புகள் இல்லை. 5 உற்பத்தி நிறுவனங்கள் அமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாங்கள் கோவையில் ஒரு உற்பத்தி மையம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், இந்த மையங்கள் எங்கு அமைய இருக்கின்றன என்பது தெரியவில்லை. கடந்த பட்ஜெட்டை காட்டிலும் இந்த பட்ஜெட் சரியாக இருந்த போதிலும் 55 சதவீத திருப்தியை தான் கொடுத்துள்ளது.